முத்தம்

நம் திருமணமாகி
மூன்று மாதத்தில்
எத்தனையோ
பதிப்புகள் உன்னால்....
ஒரு நாள்
என் தந்தை
இறப்பிற்காய்
பேருந்து பயணத்தில்
உன் மடி சாய்ந்து
அழுதுக் கதறுகையில்
நீ பதித்த
உச்சந்தலை ஒற்றை முத்தம்
என் தந்தையைத்
திருப்பிக் கொடுத்தது...

காமம் கலவா முத்தம்
நீயும் தருவாயென
அன்றே உணர வைத்தாய்...
சற்றும் எதிர்பாராத்
தருணத்தில் உன்னால்
இடப்பட்ட மருந்து...
என் தந்தையாய் நீ...
உன் குழந்தையாய் நான்...
என்றும் நானுந்தன்
அன்பிற்காய் மட்டும்...



காமராசரு...

காசேதான் கடவுளடானு
கையேந்துறவனும் நினைக்குறப்ப
கடமைய கடவுளாக்கி
கல்விக்குக் கண்
கொடுத்தவரு நம்ம
காமராசரு...

கம்மங் கூலு
கரச்சுக் குடிச்சு
ஒரு வேளை சோத்துக்கு
ஓடா உழச்சு
பிள்ளைகளை பள்ளிக்கனுப்பாம
பண்ணைக்கு அனுப்புன காலமய்யா...!

கை விரலு மண்ணுல தேய
ஆனா ஆவன்னாவ
மண்ணில் விதைச்ச
பள்ளிக்கூடத்துல படிக்கக்கூட
வசதியில்லாப் பாமரக்
கூட்டத்துக்கு....

மகிழ்ச்சியான செய்தியின்னா
மதிய உணவு திட்டமுங்க....
பள்ளியில சாப்பாடு....
சாப்பாட்டுக்காகப் பள்ளியினு
நிலைமையும் மாறுச்சு...
கல்வி நிலையுந்தான் மாறுச்சு...

தரிசு நிலத்துல
மழைமாரி பெஞ்சதுபோல்
களர் நிலத்துல
கலர் கனவுகளை
வெதச்சவரு நம்ம
காமராசரு...

காலத்துல பொன் உண்டு....
காலமே பொன்னானது
காமரசரு காலத்துல...
ஆட்சி அதிகாரம் அரசியலானப்ப
அமைதியான ஆட்சியை
அரசியலாக்குனவரு...

அரசரை உருவாக்கும்
குடிமகன் ஆனாரு...
காங்கிரசு இயக்குத்துல
காட்சிப்  பொருள் ஆனாரு...
கிங் மேக்கர் பேர் வாங்கி
வேல்டு கிங் ஆனாரு...

தனக்கேதும் சேத்துக்காம
சேர்ந்த மக்களுக்காய்
வாழ்ந்த்தவரு...
பாரத ரத்னாவ
தனக்குனு வாங்கியே
மக்கள் மனசுல நின்னாரு....



சேற்றான்

கலப்பைக் கூட
களைப்பாகிய போதும்
களிப்புடன்
கானம் பாடிய
கானம்பாடிகள்
காணமற்போன
கருணையான 
கழனியிது!

தாலாட்டு
தாலசைக்க
தாய் மடியாய்
தரணியேந்த
தவழும்
தம் குழந்தையைத்
தாங்கியதும்
தறிக்கெட்ட இக்கழநிதான்!

சேற்றில்
சோரானதும்...
சேற்றால்
சோராவதும்...
சோராது
சேகரிப்பதும்
சேறு பூசிய
சேற்றானால்....!

வாய்ப் பிளந்து
வான்  மழைக்காய் 
வானிடம் ஏங்கும்
வயல்வெளிகள்  பேசும்
வாய்ப்பிழந்து
வறுமையின்
வாயிற் அகப்பட்ட
வறியவன் கதையை...

பூமிய குளிர வச்சு
புதுநெல்ல  வெதச்சு
பூஞ்சோலையா
புதுப் பயிர் வளத்து
புடுங்கியெடுத்து
புதுவயல் நட்டு
பூட்டு வெலஞ்சதும்
புது நெல் பொறக்கும்.....

கானி நிலமும்
காணமப் போச்சு!
கருவிழியும்
காஞ்சு போச்சு...
கருப்பா? செவப்பா?
கண்ணும்  தெரியாம போச்சு....
காசுக்கு வழியில்ல...
காலணா காணல....!

மழையுந்தான்
மறந்ததுன்னா பெத்த
மவனுந்த்தான்
மறந்துட்டானே.....
மலடியா இருந்துருந்தா யாராச்சும்
மலடின்னு கூப்புடுவாங்க...
மறந்து தாயாகிப் போனதால
மறந்தும் தாயினு கூப்பிட நாதியில்ல....

கம்ப்யூட்டர் ஒலகத்துல
கம்பஞ்சோரு
காணாமப் போச்சு.....
கலியுகத்துல
கக்கூசுக்கெல்லாம்
கட்டணமாச்சு..
கட்டவண்டி ஓட்டமெல்லாம்
காரு பிளசரா மாறிப் போச்சு....

காசு பணமெல்லாம்
கால்வயிறு நிரப்பாது...
கருணை இல்லையினா
கதிரவனும் உதிக்காது...
கால் படி அரிசிய
களவாடுற
காலம் வரும்....
கம்ப்யூட்டரு காலத்துல....

பட்டிக்காட்டு
பள்ளிக்கூடத்துல
படிப்பொன்னு
படிச்சுபுட்டு
பட்டணம் போறதால
பால் வார்த்த
பூமியெல்லாம்
பாழாய் போச்சுதய்யா...








நின் கருவிழிக் கவிதைகள்

உன் கரு விழிகளும்
கவி எழுதுதடி...

இதில் என் இதயம்
என்னவோ காதிதம்தான்...

கண்டதை எழுதிவிட்டு
காணாமல் போய் விடுகிறாய்...

கணத்துக் கிடப்பது
என் காதித இதயம்தான்...

காதிதத்தைக் கிழித்து விடலாம்
காதிதமான என் இதயத்தை?

எரித்து விடுகிறேன்
இதயத்தை மட்டுமல்ல என்னையும்!

அப்பொழுதும் என் சாம்பலும் கூட
உன் கரு  விழிகளின் மொழி பேசும்...

அது மட்டுமே
என் காதலை பேசும்....